தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பினை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துவங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் தற்போது இது குறித்து ஓர் அறிவிப்பினை அறிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியா முழுவதும் கொரோனா அதிகளவில் அதிகரித்து வருகிறது. இன்று(மார்ச்.,31) 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று(மார்ச்.,31) 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனைகளில் இருந்து பரவும் நோய் தொற்று
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தொற்று குறைவாக இருந்தாலும் ஆரம்ப காலத்திலேயே தீவிர கவனம் செலுத்தும்படி தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார். மேலும் எந்த நோயாக இருந்தாலும் அது மருத்துவமனைகளில் இருந்தே பரவ துவங்கும். அதனால் நாளை(ஏப்ரல்.,1) முதல் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என அனைவருமே நிச்சயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.