LOADING...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2025
08:27 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் நேமூரில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 11 செ.மீ., ஆரணியில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென் தமிழகப் பகுதிகள் மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேசத்தின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடி மின்னலுடன் மழை

அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை

செப்டம்பர் 25 அன்று மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைக்கு அப்பால் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வடமாவட்டங்களிலும் தென்மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.