வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 3) முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதும், அது வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசக் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்பதாலும் இந்த மழைக்கான சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குத் திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, நவம்பர் 3 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நவம்பர் 4 அன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை
அடுத்தடுத்த நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர்ந்து, நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 7 அன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நவம்பர் 8 அன்று ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 6 வரை மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.