17 லட்சம் பெண்கள் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ப்பு; நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1.13 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுவரும் நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான சுமார் 17.20 லட்சம் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நிகழ்வைச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று கோலாகலமாகத் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பங்கள்
இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள்
இரண்டாம் கட்டத்திற்காக கடந்த ஜூலை மாதம் முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மொத்தம் சுமார் 29 லட்சம் பெண்கள் புதிதாகப் பதிவு செய்திருந்தனர். இதில் வருமானம், நிலம், மின்சார நுகர்வு போன்ற அரசின் தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமலும், 5 ஏக்கருக்குக் குறைவான நன்செய் நிலமோ அல்லது 10 ஏக்கருக்குக் குறைவான புன்செய் நிலமோ இருக்க வேண்டும் மற்றும் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிராகரிப்பு
நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதற்கிடையில், புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியிருந்தும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதும் பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதன்படி, நிராகரிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், முதல் கட்டத்திலோ அல்லது இரண்டாம் கட்டத்திலோ தகுதியிருந்தும் பணம் வரவு வைக்கப்படாத பெண்கள், தங்கள் பகுதி கோட்டாட்சியரை அணுகி மேல்முறையீடு செய்வதன் மூலம், இந்தத் திட்டத்தின் பயனைப் பெற மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.