வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது
தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவி வருகிறது. அதுமட்டுல்லாமல் அது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த விவகாரம் நேற்று நடந்த பீகார் மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்துள்ளது. அதன்படி, இது குறித்த உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அந்த கோரிக்கையினை ஏற்று இந்த விவகாரத்தை நேரில் ஆராய தமிழகத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் தற்போது தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை
அதன்படி தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ள பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நால்வரில் பாலமுருகனும், கண்ணனும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அந்த குழு தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-யுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்கள். மேலும் பீகார் மாநில தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணவுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.