LOADING...
உலக பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2026: இந்தியா 125 ஆவது இடத்திற்கு சரிவு; உலகளாவிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு
உலக பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2026இல் இந்தியா 125 ஆவது இடத்திற்கு சரிவு

உலக பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2026: இந்தியா 125 ஆவது இடத்திற்கு சரிவு; உலகளாவிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2026
02:31 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச குடியுரிமை மற்றும் ஆலோசனை நிறுவனமான குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் வெளியிட்டுள்ள 5 ஆவது வருடாந்திர குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (GPI) 2026 தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் உலக அளவில் 125 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு தரவரிசையில் 124 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்பொழுது 1 இடம் சரிவை சந்தித்துள்ளது. எனினும், கடந்த 5 ஆண்டுகால தரவை ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில் 127 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்பொழுது 2 இடங்கள் முன்னேறியுள்ளதுடன், அதன் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 45.1 ஆக உயர்ந்துள்ளது.

விசா இல்லாத பயணம்

26 நாடுகளுக்கு விசா இல்லாத பயண அனுமதி வழங்கும் இந்தியா

இந்த 2026 ஆம் ஆண்டின் புதிய அறிக்கையின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள 26 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது அங்கு சென்றிறங்கியவுடன் விசா பெறும் வசதியையோ பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி பூடான், நேபாளம், ஜமைக்கா, மக்காவ், பாலஸ்தீனம், துனிசியா, அங்கோலா மற்றும் பார்படாஸ் போன்ற நாடுகளுக்கு இந்தியர்கள் எளிதாகப் பயணம் செய்யலாம். அதே நேரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா மற்றும் யுஏஇ உள்ளிட்ட சுமார் 88 நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் இன்னும் முன்கூட்டியே விசா பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.

வாழ்க்கைத் தரம்

மேம்படுத்தப்பட்ட பயண இயக்கம் மற்றும் வாழ்க்கைத் தரக் குறியீடு

இந்தக் குறியீடானது வெறும் விசா இல்லாத பயணத்தை மட்டும் அளவிடாமல் 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் பாஸ்போர்ட்டின் வலிமையை மதிப்பிடுகிறது. இதில் 50 சதவீத முக்கியத்துவம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பயண இயக்கக் குறியீட்டில் (Enhanced Mobility Index) இந்தியா கடந்த ஆண்டை விட 1 இடம் சரிந்து 136 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், 25 சதவீத முக்கியத்துவம் கொண்ட ஆரோக்கியம், கல்வி மற்றும் தனிநபர் பாதுகாப்பு சார்ந்த வாழ்க்கைத் தரக் குறியீட்டில் (Quality of Living Index) இந்தியா கடந்த ஆண்டை விட 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 118 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

Advertisement

வளர்ச்சி

தொழில் மற்றும் முதலீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் அசாத்திய வளர்ச்சி

நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் வணிக சாதகங்களை 25 சதவீத பங்களிப்புடன் மதிப்பிடும் முதலீட்டுக் குறியீட்டில் (Investment Index) இந்தியா கடந்த முறையை விட 3 இடங்கள் முன்னேறி 94 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா 104 ஆவது இடத்துடன் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. இருப்பினும் பங்களாதேஷ் (166 ஆவது இடம்), நேபாளம் (164 ஆவது இடம்) மற்றும் பாகிஸ்தான் (188 ஆவது இடம்) ஆகிய நாடுகளை விட இந்தியா மிகச் சிறந்த நிலையில் உள்ளது. இப்பட்டியலில் நமீபியா 124 ஆவது இடத்திலும், அஜர்பைஜான் 126 ஆவது இடத்திலும் உள்ளன.

Advertisement

ஸ்வீடன்

ஸ்வீடன் பாஸ்போர்ட் உலகிலேயே முதலிடம் பிடித்து சாதனை

இந்த 2026 ஆம் ஆண்டின் குளோபல் பாஸ்போர்ட் குறியீட்டுப் பட்டியலில் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் 96.05 மதிப்பெண்களுடன் உலகிலேயே மிக வலிமையான பாஸ்போர்ட் கொண்ட நாடாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்பட்டியலில் சுவிட்சர்லாந்து 2 ஆவது இடத்தையும், பின்லாந்து 3 ஆவது இடத்தையும், ஜெர்மனி 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் கூட்டாக 5 ஆவது இடத்திலும், அயர்லாந்து, இங்கிலாந்து, நார்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த டாப் 10 இடங்களையும் பிடித்து தங்களது பாஸ்போர்ட் வலிமையை நிரூபித்துள்ளன.

Advertisement