சீனா எல்லைப் பகுதியில் தயார்நிலை: வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படைப் பயிற்சி - NOTAM அறிவிப்பு வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படை (IAF), சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ஒரு பெரிய அளவிலானப் பயிற்சிக்காக NOTAM (Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இப்பகுதியில் இந்தியாவின் மேம்பட்ட செயல்பாட்டுத் தயார் நிலையைத் தெளிவுபடுத்துகிறது. இந்த அறிவிப்புகள் அடுத்த சில மாதங்களுக்குப் பல தேதிகளில் செயலில் இருக்கும் என அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதற்கட்ட NOTAM அறிவிப்புகள் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளிலும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 18 ஆகிய தேதிகளிலும் நடைமுறையில் இருக்கும்.
போர் ஒத்திகை
ஜனவரியில் போர் ஒத்திகை
மேலும், ஜனவரி 1 மற்றும் ஜனவரி 15 ஆகிய தேதிகளிலும் விரிவானப் போர் ஒத்திகைகள் தொடரும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி காலங்களில், இந்திய விமானப்படை, இப்பகுதியில் உள்ள பல்வேறு தளங்களில் விரிவானப் போர் ஒத்திகைகள், ஒருங்கிணைந்த விமானங்கள் மற்றும் தளவாடப் பயிற்சிகளை மேற்கொள்ளும். நான்கு நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வடகிழக்கு பிராந்தியம், இந்தியாவின் மிக முக்கியமான இராணுவத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் பயிற்சித் தொடர், இப்பகுதியில் இந்தியாவின் வான் ஆதிக்கம் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெரிய போர்ப் பயிற்சியான திரிசூல், குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் ராணுவப் படைகளை ஒருங்கிணைத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.