
திருமணமாகாதவர்களுக்கு அனுமதியில்லை; பேனர் வைத்து டிரெண்டான ஓசூர் பூங்கா; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் குறிப்பாக 2கே கிட்ஸ் வரம்பு மீறி அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, பூங்கா நிர்வாகம் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என பேனர் வைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. பூங்காவில் பொது இடங்களுக்குத் தகுதியற்ற அநாகரிகச் செயல்கள் அதிகரித்து வருவதால், இதர குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சங்கடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மாலை நேரங்களில் இந்தப் பூங்கா அமைதியையும் இயற்கை அழகையும் தேடி வரும் குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஜோடிகள் எனப் பலரைக் கவர்ந்திழுக்கிறது.
புகார்கள்
வரம்பு மீறிய செயல்கள் குறித்துப் புகார்
இருப்பினும், சமீப காலமாகப் பூங்காவிற்கு வரும் இளம் காதலர்கள் பலர், பொதுவெளியில் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்தன. இந்த நடத்தை பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாகக் குழந்தைகள் முன்னிலையில் விரும்பத்தகாததாகவும் இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பூங்கா நிர்வாகம் உடனடியாகப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கி, இனிமேல் பூங்காவிற்கு வரும் ஜோடிகளில் திருமணமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை என பேனர் வைத்தது. இதை பூங்காவிற்கு செல்லும் பலரும் வரவேற்றாலும், சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் நிர்வாகம் பேனரை அகற்றியதாகக் கூறப்படும் நிலையில், இளம் ஜோடிகள் எல்லை மீறுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.