ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமூக வலைத்தளங்களின் வாயிலாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்னும் தொடரின் மூலம் அளித்து வருகிறார். அதன்படி, அதில் ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு ஒன்றினை தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் செவிசாய்ப்பார்களா? என்று கேள்வியினை கேட்டுள்ளார்கள். அதற்கு முதல்வர் அவர்கள், இதுவரையிலான செயல்பாடுகளை பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உள்ளது, காதுகள் இல்லை என்று பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் கூட்டணி கட்சி குறித்து ஒற்றை வரியில் கூற சொன்னால் என்ன சொல்வீர்கள்? என்ற கேள்விக்கு, 'தோள் கொடுப்பான் தோழன்' என்பதன் அடையாளம் அவர்கள் என்று கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து கருத்து
மேலும் வடகிழக்கு தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மேகாலயா மாநிலத்தில் 59 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இரண்டு தொகுதிகளில் தான் வெற்றிபெற்றது என்றும், திரிபுரா நாகாலாந்து மாநில வெற்றியை பேசும் பாஜக இது குறித்து பேசுவதில்லை என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜக ஆட்சிக்கு வரும் பொழுது ஒரு சிலிண்டரின் விலை ரூ.414. ஆனால் தற்போது அதன் விலை ரூ.1,118 என்றும் கூறிவிட்டு, இதைத்தவிர வேறு எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.