கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். கௌதம் அதானியின் சமீபத்திய பங்குச் சந்தை பிரச்சனைகள் 'இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை' தூண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி 'கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்' என்றும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் சமீபத்தில் கூறி இருந்தார். அதானி பிரச்சனைகளால் "இந்தியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது மோடி வைத்திருக்கும் பிடி பலவீனப்படுத்தப்படும். இந்தியாவிற்கு தேவையான நிறுவன சீர்திருத்தங்கள் ஏற்படும். இந்தியாவில் ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும், "பங்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறி இருந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
வயதானவர், கோடீஸ்வரர் ஜார்ஜ்-சோரஸ் போன்ற ஆட்கள் நியூயார்கில் அமர்ந்து கொண்டு உலகம் முழுவதும், தங்களின் கருத்துகள் படியே இயங்க வேண்டும் என்று ஆசைபடுகின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் செல்வத்தை பயன்படுத்தி கதைகளைக் கட்டமைக்கிறார்கள். இவரை போன்ற ஆட்கள் எல்லாம் அவர்களுக்கு விருப்பமானவர்கள் தேர்தலில் ஜெயித்தால் அதை நல்லது என்பார்கள். அதே நேரம், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஜனநாயக குறைபாடு என்பார்கள். எங்கள் ஜனநாயகத்தில் எங்களால் வாக்களிக்க முடிகிறது. இதற்கு முன் அப்படி இருந்ததில்லை. தேர்தல் முடிவுகள் தீர்க்ககமாக உள்ளன. தேர்தல் முடிவுகள் சரியில்லை என்று நீதிமன்றத்தை நாடும் நாடு எங்களுடையது அல்ல. முன்பும், நாங்கள் முஸ்லிம்களிடம் இருந்து குடியுரிமையை பறித்துவிடுவோம் என்று அவர் கூறினார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.