
ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' இனத்தினை பாதுகாத்து, அதன் இருப்பிடங்களை மேம்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை ஒன்றினை அண்மையில் பிறப்பித்துள்ளது.
அதன்படி, சுற்றுசூழல் மற்றும் வனத்துறை தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள உத்தரவில், "இந்தியாவில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடு திட்டம் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, ஒலிபெருக்கிகள் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோயால் பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், அதன் பழைய வாழ்விடங்களை மேம்படுத்தி அதற்கு மீண்டும் அறிமுகம் செய்தல், சோலை புல்வெளிகளை அமைத்தல் போன்ற பணிகள் துவங்கப்படும்.
வரையாடு எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை
உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, வரையாடு வாழ ஏதுவான சூழல் உருவாக்கப்படும்
மேலும் வரையாட்டின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதி வரையாடு தினமாக கடைபிடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இயற்கை பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வரையாடு அழிந்து வரும் இனம் என்று அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 3,122 வரையாடுகள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த வரையாடு இனம் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் தரவு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாத காரணத்தினால் தற்போது தமிழகம், கேரளாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம், அவற்றின் வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, வாழ்வதற்கு ஏதுவான சூழல் அமைக்கப்படுவதோடு, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.