டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: டாக்டர் உமர் நபியே சூத்திரதாரி! DNA சோதனை உறுதி
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி தான் செயல்பட்டுள்ளார் என்பது DNA சோதனை மூலம் தற்போது உறுதியாகியுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி நிகழ்ந்த இந்தக் கொடூரமான தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பில் கார் ஓட்டுநரின் உடல் சிதைந்ததால், அவரது அடையாளம் உடனடியாகத் தெரியாமல் இருந்தது. குண்டுவெடிப்பில் சிதறிய மனித உடலின் பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள், புல்வாமாவில் உள்ள Dr.உமர் உன் நபியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. இதில், காரை ஓட்டியவர் Dr.உமர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தொடர்பு
டாக்டர். உமருக்குள்ள பயங்கரவாத தொடர்பு
உமர், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் ஒரு தளவாடப் பிரிவுடன் (Logistics Module) தொடர்புடையவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குழுவில் சுமார் 9 முதல் 10 பேர் இருந்துள்ளனர், அவர்களில் 5 முதல் 6 பேர் மருத்துவர்கள் என்றும், வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்களை பெற இவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தீவிரவாத நெட்வொர்க் தொடர்பாக ஃபரிதாபாத்தில் இருந்து முன்னாள் விரிவுரையாளர் டாக்டர் ஷாஹீன் ஷாஹித் உட்பட பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மற்ற மருத்துவர்கள் முஸம்மில் அகமது கனாய் மற்றும் நஜமுல் அகமது மாலிக் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டு தொடர்பு
வெளிநாட்டுப் பயணம் மற்றும் திட்டமிடல்
டாக்டர் உமர் நபியும், டாக்டர் முஸம்மில் கனாயும் துருக்கிக்குச் (Turkey) சென்று வந்துள்ளனர். அங்குள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மூலம் இவர்கள் தீவிரவாதத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டமான இடங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதனைச் செயல்படுத்த முடியாமல் போனதாகவும் புலனாய்வுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.