
தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் மட்டுமே சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
அதன் படி, தை அமாவாசை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.
அதன் படி, தை அமாவாசையான இன்று சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்களில் 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.
போலீசார் விசாரணை
மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்த பக்தர்
இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நுழைவுவாயில் பகுதியில் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமிதரிசனம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் சதுரகிரி மலையில் தங்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மலையேறிய கோவையை சேர்ந்த சிவக்குமார்(48) என்பவர் வனத்துர்க்கை கோயில் அருகே சென்றபொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
அங்கிருந்த வனத்துறையினர் அவரது சடலத்தை அடிவாரப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சாப்டூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.