
2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைதுகள் மற்றும் பாஸ் (Boss) மோசடிகள் ஆகியவையே அதிக அளவில் பதிவாகி வரும் சைபர் குற்ற வகைகளாக உள்ளன. இந்த நிதி இழப்பைக் குறைப்பதில் டெல்லி காவல்துறை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம், மோசடி செய்யப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20% தொகையை காவல்துறை முடக்கியுள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் மீட்பு விகிதத்தை விட (10%) கிட்டத்தட்ட இருமடங்காகும்.
உதவி எண்
சைபர் கிரைம் மோசடியை புகாரளிக்க உதவி எண்
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தேசிய உதவி எண்ணுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறை துணை ஆணையர் வினித் குமார் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் குற்றத்தைப் பற்றித் தெரிவித்து, பரிவர்த்தனை விவரங்களை வழங்கியவுடன், மோசடியான நிதியை நிறுத்தி வைக்க லியன் மார்க்கிங் செயல்முறையை காவல்துறை உடனடியாகத் தொடங்குகிறது.
மோசடிகள்
2025 ஆம் ஆண்டின் மூன்று பொதுவான மோசடிகள்
2025 ஆம் ஆண்டில் அதிக மதிப்புள்ள மோசடிகளாகப் பதிவாகி உள்ள மூன்று வகைகள் பின்வருமாறு:- முதலீட்டு மோசடிகள்: சைபர் கிரிமினல்கள் சமூக ஊடகங்களில் பெண்களைப் போல நடித்து, ஆன்லைன் முதலீட்டு குழுக்களில் சேருமாறு மக்களை ஏமாற்றுகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே இந்த மோசடிகள் பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. டிஜிட்டல் கைதுகள்: மோசடி செய்பவர்கள் காவல்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, பணமோசடி போன்ற தீவிர குற்றங்களுடன் வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்துகிறார்கள். இதனால் அபராதம் அல்லது பிணைத் தொகையை செலுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். பாஸ் மோசடிகள்: நிறுவனங்களில் உள்ள ஊழியர்களை குறிவைத்து, உயர் அதிகாரிகளைப் போல வேடமிட்டு அவசரமாகப் பணம் அல்லது ரகசியத் தகவல்களைக் கோருவதே இந்த மோசடியின் நோக்கமாகும்.