LOADING...
தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?
சி.ஜே. ராய் கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்

தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
07:02 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவருமான சி.ஜே. ராய் (57), கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்ததால், இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது ராய் எழுதி வைத்திருந்த 9 பக்கத் தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.

விவரங்கள்

கடிதத்தின் விவரங்கள்

கடிதத்தில், தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ராய், இது தனது வாழ்வின் "இறுதி முடிவு" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு வர வேண்டிய பணம் மற்றும் தனது தொழில் தொடர்பான நிதி விவரங்களை மிக விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். உருக்கத்துடன், தனது நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்றும், அவர்கள் தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதோடு, தனது மறைவுக்குப் பிறகு தொழிலை நிர்வகிக்க வேண்டிய வாரிசுகள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

குற்றச்சாட்டு

IT அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

இந்த மரணத்தை ஒட்டி கர்நாடக அரசியலில் 'வரி பயங்கரவாதம்' (Tax Terrorism) குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ராயின் தற்கொலைக்கு ஐடி அதிகாரிகளின் கடும் நெருக்கடியே காரணம் என அவரது சகோதரர் சி.ஜே. பாபு குற்றம் சாட்டியுள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, முறையான நீதி விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரித்து வருகிறது.

Advertisement

விசாரணை

SIT விசாரணையில் வெளியான முரண்பாடுகள்

SIT இந்த சம்பவத்தில் பல மர்மமான முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று அங்கிருந்த ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து பெறுவதற்காக மட்டுமே தாங்கள் அங்கு சென்றதாகவும், ராயின் நடமாட்டத்தையோ அல்லது அவரது உடைமைகளையோ தாங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஏ. ஜோசப் அளித்த புகாரில் உள்ள நேரத்திற்கும், ஊழியர்களின் வாக்குமூலத்திற்கும் இடையேயும் முரண்பாடு உள்ளது. ராய் தங்கியிருந்த அறை முழுமையாக Soundproof வசதி கொண்டது அல்ல. அப்படியிருந்தும், அவர் துப்பாக்கியால் சுட்ட சத்தம் ஏன் யாருக்கும் கேட்கவில்லை என்ற கேள்வி விசாரணையில் எழுந்துள்ளது.

Advertisement