விமானிகளுக்கு இனி ஆண்டுக்கு ஒருமுறை 'டோப் டெஸ்ட்': அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறையாவது சீரற்ற முறையில் கட்டாய போதைப்பொருள் சோதனை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். போதைப்பொருட்களை பயன்படுத்தும் விமானிகள் மீதான சோதனைக் கட்டமைப்பை இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, மொத்த விமானிகளில் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆண்டுதோறும் சீரற்ற முறையில் டோப் டெஸ்ட் நடத்தப்படுகிறது. ஆனால், வரும் நாட்களில் நாட்டின் அனைத்து விமானிகளும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படும் வகையில் புதிய கொள்கை கொண்டுவர திட்டமிடப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
ஏர் இந்தியா சம்பவமும், விசாரணையும்
கடந்த ஆகஸ்ட் 4 அன்று ஃபூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா ஏ320நியோ விமானம், பயணத்தின் போது திடீரென 300 அடி கீழே இறங்கி பதற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த விமானத்தின் முதன்மை விமானிக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 5,000 விமானிகளுக்கும் உடனடியாக போதைப்பொருள் பரிசோதனை நடத்தின.
இதனிடையே, ஆண்டுதோறும் நடத்தப்படும் சீரற்ற சோதனையை 10 சதவீதத்திலிருந்து 20-25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) DGCA-விடம் வலியுறுத்தியுள்ளது.