SIR படிவத்தை நிரப்புவதில் சந்தேகமா? சென்னையில் நாளை முதல் உதவி மையங்கள் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னை மாவட்டத்தில் 2026 பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு உதவும் நோக்கில், வரும் நவம்பர் 18, 2025 முதல் 25, 2025 வரை எட்டு நாட்களுக்கு வாக்காளர் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படவுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ஜெ. குமரகுருபரன் அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து 947 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த உதவி மையங்கள் செயல்படும். எட்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் சேவைகளைப் பெறலாம்.
நோக்கம்
மையங்களின் நோக்கம்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து வரும் நிலையில், அந்தப் படிவங்களை நிரப்புவதில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும், வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்கவும் இந்த மையங்கள் உதவ உள்ளன. இங்கு படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் (BLAs) இந்தப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. வரைவுப் பட்டியல் வெளியாகும் வரை, ஒரு முகவர் நாளொன்றுக்கு அதிகபட்சம் 50 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்றுச் சமர்ப்பிக்கலாம். தவறான தகவல்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கும் உறுதிமொழியையும் அவர்கள் வழங்க வேண்டும்.