LOADING...
சென்னையின் பயணப் புரட்சி: "சென்னை ஒன்" செயலி இன்று அறிமுகம்!
சென்னை மக்களுக்கான "சென்னை ஒன்" செயலி இன்று அறிமுகம்!

சென்னையின் பயணப் புரட்சி: "சென்னை ஒன்" செயலி இன்று அறிமுகம்!

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2025
08:50 am

செய்தி முன்னோட்டம்

சென்னை மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) வடிவமைத்துள்ள "Chennai One" மொபைல் செயலி இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தச் செயலியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து செயலியான இது, மக்களின் பயண அனுபவத்தை முழுவதுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MTC-யின் சுமார் 6,000 பேருந்து நிறுத்தங்கள், 650 வழித்தடங்கள் மற்றும் 3,500 பேருந்துகள் பற்றிய துல்லியமான தகவல்களுடன் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 47 லட்சம் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சென்னையில், இந்த ஒருங்கிணைந்த செயலி பயணத்தை மிகவும் எளிதாக்கும் என CUMTA நம்புகிறது.

சிறப்பு அம்சங்கள்

'சென்னை ஒன்' செயலியின் சிறப்பு அம்சங்கள்:

ஒருங்கிணைந்த போக்குவரத்து: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், மற்றும் தனியார் கேப், ஆட்டோ என அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். QR குறியீடு மூலம் கட்டணம்: பயணிகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து எளிதாக பயணக் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் பெறலாம். பயண வழித்தடத் தகவல்: நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் உள்ள பேருந்து, ரயில் அல்லது மெட்ரோ நிலையங்களை கண்டறியலாம். அத்துடன், நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்குச் செல்ல சிறந்த வழித்தடம், பயண நேரம் மற்றும் நிறுத்தங்கள் பற்றிய தகவல்களையும் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.

தகவல்

மேலும் சில அம்சங்கள்

டிஜிட்டல் டிக்கெட் முன்பதிவு: நகரப் பேருந்துகளில் எந்த நிறுத்தத்திலிருந்து எந்த நிறுத்தம் வரை பயணிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து, டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். UPI கட்டண வசதி: Google Pay, PhonePe, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் உடனடியாக பணம் செலுத்தலாம். நிகழ்நேர பஸ் டிராக்கிங்: நீங்கள் செல்லவிருக்கும் பஸ் எந்த இடத்தில் வருகிறது என்பதை நிகழ்நேரத்தில் அறிந்துகொள்ள முடியும். சுற்றுலா வழிகாட்டி: சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பேருந்து, ரயில் அல்லது ஆட்டோ மூலம் எப்படிச் செல்வது என்பதையும் இந்தச் செயலி காட்டுகிறது.