LOADING...
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
02:14 pm

செய்தி முன்னோட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, விடுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் முறையாகச் சோதிக்கப்பட வேண்டும். வாகனங்களின் விவரங்கள் மற்றும் உரிமையாளர்களின் தகவல்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகள் மற்றும் உணவு பரிமாறப்படும் இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அவற்றின் உறுதித்தன்மை குறித்துத் தீயணைப்புத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பாக, நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அதன் அருகிலோ மேடைகள் அமைக்கக் கூடாது.

ஒழுங்குமுறை

காலக்கெடு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை

உணவு மற்றும் மதுபான விநியோகத்தை அதிகாலை 1 மணிக்குள் கண்டிப்பாக முடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. விடுதிக்கு வரும் வாகனங்கள் அந்தந்த விடுதியின் வாகன நிறுத்தத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது. மதுபானங்கள் உரிமம் பெற்று அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நீச்சல் குளத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் விடுதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisement