மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இன்ஸ்டாகிராமில் உள்ள குழந்தை வன்கொடுமை விளம்பரங்களை உடனடியாக நீக்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலியில், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான கட்டண விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அத்தகைய சட்டவிரோதமான அனைத்து விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் உடனடியாகத் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு
7 நாட்களுக்குள் விளக்கமளிக்க ஐடி அமைச்சகம் உத்தரவு
மத்திய அரசு இந்த விவகாரத்தை நாட்டின் மிக முக்கியப் பாதுகாப்புச் சிக்கலாகக் கருதி, இன்ஸ்டாகிராம் தளம் உடனடியாகத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய தடைசெய்யப்பட்ட மற்றும் கொடூரமான உள்ளடக்கங்கள் எப்படி மெட்டா நிறுவனத்தின் விளம்பரக் கொள்கைகளைத் தாண்டி தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டன என்பது குறித்தும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அல்காரிதம் பெருக்கம் மற்றும் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை
இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள 'அல்காரிதம் பெருக்கம்' (Algorithmic Amplification) காரணமாக இத்தகைய தவறான விளம்பரங்களின் பார்வைத் திறன் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதற்கு பொறுப்பான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வரும் கட்டண விளம்பரங்கள் மூலம் பயனர்கள் சட்டவிரோத உள்ளடக்கங்களை சேமித்து வைத்துள்ள வெளித்தளங்களுக்குத் திசைதிருப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு
பிபிசி புலனாய்வு அறிக்கையில் அம்பலமான உண்மை
பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) உலகளாவிய சேவைப் பிரிவு நடத்திய புலனாய்வு அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிபிசி தனது விசாரணையில், இன்ஸ்டாகிராம் தளத்தின் விளம்பரச் சோதனைகளைத் தாண்டி சில கட்டண விளம்பரங்கள் இந்தியாவில் தடையின்றி உலா வந்ததை அம்பலப்படுத்தியது. அந்த விளம்பரங்களில் ரேப் வீடியோ மற்றும் சைல்டு வீடியோ போன்ற அதிர்ச்சிகரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், வெறும் 99 ரூபாய் கட்டணத்தில் சட்டவிரோதக் காணொளிகளை வழங்கும் டெலிகிராம் சேனல்களின் லிங்க்குகளும் பகிரப்பட்டிருந்தன.
நிறுவனங்கள் விளக்கம்
மெட்டா மற்றும் டெலிகிராம் நிறுவனங்கள் அளித்துள்ள விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள மெட்டா நிறுவனம், விதிகளுக்குப் புறம்பான அந்த விளம்பரங்கள் உடனடியாக நீக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பான கணக்குகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தானியங்கி அமைப்புகள் மூலம் இத்தகைய விளம்பரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. மறுபுறம், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள டெலிகிராம் நிறுவனம், குழந்தை வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களுக்கு எதிராகத் தாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நடப்பு 2026 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட 2.74 லட்சம் சேனல்கள் மற்றும் குரூப்புகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.