ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய காவல்துறை
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஊடக செய்திகளின்படி, தெலங்கானா காவல்துறை இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின் முக்கிய விவரங்கள் இங்கே: துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேகநபர் சாஜித் அக்ரம்(50), இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். சாஜித் அக்ரம் தனது பி.காம் பட்டத்தை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு, சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 1998-ல் வேலை தேடி ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறினார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியிருந்தாலும், இந்திய பாஸ்போர்டையே வைத்திருந்தார்.
குடும்ப நிலை
நிரந்தர வசிப்பிடத்திற்காக ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்த சாஜித்
ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கு முன், அவர் ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் (நவீத் அக்ரம் -இரண்டாவது சந்தேகநபர்) மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனும், மகளும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய குடிமக்கள் ஆவர். "கடந்த 27 ஆண்டுகளாக சாஜித் ஹைதராபாத்தில் உள்ள தனது உறவினர்களுடன் குறைந்த அளவிலேயே தொடர்பு கொண்டிருந்தார்," என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிறகு அவர் ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்கு சென்றார், முதன்மையாக சொத்து தொடர்பான விஷயங்கள் மற்றும் அவரது வயதான பெற்றோரைச் சந்திக்க என கூறுகிறது காவல்துறை. "அவரது தந்தை இறந்தபோது கூட அவர் இந்தியாவுக்குப் பயணம் செய்யவில்லை," என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
IS தொடர்பு
தந்தை- மகன் இருவரும் IS கொள்கையால் ஈர்க்கப்பட்டனர்
சாஜித் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் ஆகியோரின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு வழிவகுத்த காரணிகள், இந்தியாவுடனோ அல்லது தெலங்கானாவில் உள்ள உள்ளூர் செல்வாக்குடனோ எந்த தொடர்பும் இல்லை என்று தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் 1998-ல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன், தெலங்கானா காவல்துறையில் அவருக்கு எதிராக எந்தவொரு பாதகமான பதிவுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டை 'இஸ்லாமிய அரசு (ISIS) அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதத் தாக்குதல்' என்று ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். சந்தேகநபர்கள் இருவரும் நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ததாகவும், அங்கு அவர்களுக்கு 'இராணுவப் பாணி பயிற்சி' அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவர்களின் பிலிப்பைன்ஸ் பயணம் குறித்து ஆஸ்திரேலியா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.