LOADING...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கொங்கு மண்டலத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கொங்கு மண்டலத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்பொழுது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத் முதல் கேரளா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவி வரும் சூழலில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா - மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் இந்தத் தாழ்வு மண்டலம் தற்பொழுது மையம் கொண்டுள்ளது.

24 மணிநேரம்

அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும்

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா கடலோர பகுதியில் சந்த்பாலி மற்றும் பாலசோர் ஆகிய இடங்களுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இது மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று (ஜூலை 5) தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இத்துடன் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

மீனவர்கள்

சென்னை நிலவரம் மற்றும் மீனவர்களுக்கான அவசர எச்சரிக்கை

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் கடுமையான சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், தற்போதைய சூழலில் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement