ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!
உத்தரகண்ட் ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்ற உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரகண்ட் ஹல்த்வானியில் உள்ள 29 ஏக்கர் கொண்ட பகுதி ரயில்வேக்கு சொந்தமானது. ஆனால், இந்த பகுதியில் கிட்டத்தட்ட 4000 வீடுகள், 11 தனியார் பள்ளிகள், 4 அரசு பள்ளிகள், 10 மசூதிகள், 1 வங்கி, 4 கோயில்கள் ஆகியவை அமைந்துள்ளன. ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இந்த மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு உத்தராகண்ட் உயர்நீதி மன்றத்த்தில் வழக்கு போடப்பட்டது. இதற்கு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் 4000 கும்பங்களையும் வெளியேற உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
இந்த மாதம் 9ஆம் தேதிக்குள் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிரித்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை இன்று(ஜன:5) விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. "ஒரே இரவில் 50,000 பேரை வெளியேற்ற முடியாது. நிலத்தில் உரிமை இல்லாத மக்களை முதலில் வகைப்படுத்த வேண்டும். பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனையை நாம் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்." என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.