
கோவை மக்களுக்கு குட் நியூஸ்; அடுத்த மாதம் அவிநாசி மேம்பால திறக்கப்படும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
கோவை அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், இந்த மாத இறுதியில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் உள்ள மிக நீண்ட மேம்பாலங்களில் ஒன்றாக அமையும். இந்த 4 வழிப்பாலம் 17.25 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை, மற்றும் விமான நிலையம் ஆகிய இடங்களில் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரெசிடென்சி ஹோட்டல் அருகே மட்டும் ஏறுதளம் அமைக்கும் பணி மீதமுள்ளது.
சோதனை ஓட்டம்
ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம்
கோட்டப் பொறியாளர் சமுத்திரக்கனி கூறுகையில், "பாலத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஹோப் கல்லூரி அருகே உள்ள ரயில்வே பாலத்தில் 52 மீட்டர் நீளத்திற்கான இரும்புப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேம்பாலத்தில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும்." என்று தெரிவித்தார். மேம்பாலத்தின் அனைத்துப் பணிகளும் இந்த மாத இறுதியில் முடிந்து, அடுத்த மாதம் முதல் வாரத்தில் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதும், அவிநாசி சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.