அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை: 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பு! 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
அசாம் மாநிலத்திலும் அதன் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, அசாமில் இந்த ஆண்டின் முதல் அலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் தற்பொழுது மாநிலத்தின் 6 மாவட்டங்களை சேர்ந்த 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விவசாய நிலங்கள் சேதம்
96 கிராமங்கள் மூழ்கடிப்பு மற்றும் விவசாய நிலங்கள் சேதம்
அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி தேமாஜி, நல்பாரி, திப்ருகர், சிராங், லக்கிம்பூர் மற்றும் கோக்ரஜார் ஆகிய 6 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தேமாஜி மாவட்டம் 15,483 பாதிக்கப்படைந்த மக்களுடன் மிக மோசமான நிலையை சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 96 கிராமங்கள் வெள்ள நீரில் முற்றிலும் மூழ்கியுள்ளதுடன், 1,690 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்களும், 48,199 க்கும் மேற்பட்ட கால்நடைகளும் இந்த வெள்ளப் பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நதிகளில் வெள்ளப்பெருக்கு
ஆபத்தான கட்டத்தைத் தாண்டி ஓடும் நதிகள்
தொடர் கனமழையின் காரணமாக அசாமின் முக்கிய நதிகள் மற்றும் அவற்றின் துணை நதிகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக சிவசாகர் மாவட்டத்தில் பாய்ந்தோடும் திசாங் நதியானது நங்லாமுராகாட் பகுதியில் தற்பொழுது அபாயக் கட்டத்திற்கும் மேல் ஆபத்தான முறையில் சீறிப்பாய்ந்து ஓடுவதால், அதன் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மேலும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு
சிமென் நதி ரயில் பாலம் இடிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு
மழை ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள சிமென் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ரயில் பாலம் கடுமையான வெள்ள அரிப்பு காரணமாகப் பகுதியளவு இடிந்து விழுந்துள்ளது. தேமாஜி மாவட்டத்தில் பதிவான 110 மில்லி மீட்டருக்கும் அதிகமான பெருமழையே இந்த நதி அரிப்பிற்கு முதன்மைக் காரணம் என வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி அர்ச்சிபதர் மற்றும் சிமென் சபாரி ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தற்பொழுது தற்காலிகமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.