ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை
தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்ட-அந்தியூர் பகுதியில் வாராவாரம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை விற்பனை சந்தைகளில் நடப்பது வழக்கம். இந்த சந்தையில் விற்பனை செய்வதற்காகவே பலபகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை கொண்டு வருவார்கள். இங்கு வெற்றிலைகள் ஒரு கட்டாக, அதாவது அந்த கட்டில் 100 எண்ணிக்கையினை கொண்ட வெற்றிலைகள் வைத்து கட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த சந்தையில் வெற்றிலைகள் ராசி வெற்றிலை, பீடா வெற்றிலை, என பல தரங்களில் பிரித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். ராசி வெற்றிலை என்பது மிக மிருதுவாக,கரும்பச்சை நிறத்தில் காணப்படும். இந்த ரக வெற்றிலைகள் திருமண நிகழ்ச்சி, கோயில் பூஜைகள் போன்றதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
வார சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வெற்றிலைகள்
அதனை தொடர்ந்து பீடா வெற்றிலைகள் சற்று கடினமானதாக, வெளிர்பச்சை நிறத்தில் காணப்படும். இந்த வெற்றிலை என்பது காரத்தன்மை கொண்டதால் இதனை கமார் வெற்றிலை என்றும் சொல்வார்கள். இந்த ரக வெற்றிலை பீடா தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் வார சந்தையில் வெற்றிலைகள் விற்பனை செய்யப்பட்டது. அதில் ராசி வெற்றிலை ஒரு கட்டு ரூ.80 முதல் ரூ.150 வரையும், பீடா வெற்றிலை ரூ.50 முதல் ரூ.70 வரை ஏலம் போனது. இதற்கிடையே செங்காம்பு என்னும் ஓர் ரக வெற்றிலையும் விற்பனை செய்யப்பட்டது. அது ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.3 லட்சத்துக்கு 50 ஆயிரத்திற்கு வெற்றிலைகள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.