ஆந்திரப் பிரதேச கோவிலில் சோகம்: ஏகாதசி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் பலி
செய்தி முன்னோட்டம்
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் உடல்கள் சிதறிக் கிடக்கும் கோரமான காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது மனம் உடைக்கும் செயல் என்று சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்தார்.
நடவடிக்கை
உடனடி நடவடிக்கை
சந்திரபாபு நாயுடு, "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த கூட்ட நெரிசல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது." என்று கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர், காயமடைந்தவர்களுக்கு உடனடியாகவும், முறையான சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏகாதசியை ஒட்டி அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டபோது இந்தச் சோகமான சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.