ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மே 13-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட உள்ளன. ஆந்திராவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் YSRC கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் (ஜேஎஸ்பி) பாஜக ஒரு மூலோபாய கூட்டணியை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆந்திரா சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு
மக்களவைத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி வெற்றிபெறப் போகிறது என்று TV5 தெலுங்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக்கணிப்பில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணிக்கு 161 சட்டமன்ற இடங்களும், ஜெகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சிக்கு 14 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. 2024 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பீப்பிள்ஸ் பல்ஸ் கணித்துள்ளது. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டசபையில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி 111-135 இடங்களைக் கைப்பற்றும் அதே வேளையில், ஒய்எஸ்ஆர்சி 45-60 இடங்களைப் பெறக்கூடும்.