முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று(ஜூலை.,28) ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரிலான பாதயாத்திரையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா மதுரைக்கு வருகை தந்தார். அதன் பின்னர், அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். இந்நிலையில் அமித்ஷா இன்று(ஜூலை.,29)காலை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் என்று தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்துல் கலாமின் எதிரிகள் குறித்தும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது - அமித்ஷா
மறைந்த அப்துல் கலாம் குறித்த விவரங்கள் அடங்கிய 'கலாம் நினைவுகள் இறப்பதில்லை' என்னும் தலைப்பிலான புத்தகத்தினை வெளியிட்ட அமித்ஷா, அந்நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார். அவர் பேசியதாவது, "ராமேஸ்வரம் என்னும் சிறிய ஊரில் பிறந்து, வளர்ந்து உலகமே வியக்கும் வண்ணம் பெரும் விஞ்ஞானியாக உயர்ந்தவர் அப்துல் கலாம். ஒரு நாட்டின் ஜனாதிபதி என்னும் உயர் பதவியில் இருந்த போதிலும், சாதாரண தொழிலாளியிடம் நல்லுறவு பேணியவர் அப்துல் கலாம்" என்று கூறியுள்ளார். மேலும், "அவரது போராட்டங்கள், வெற்றிகள், அவரது தோல்விகள், அவரது நண்பர்கள், அவ்வளவு ஏன் அவரது எதிரிகள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார். அப்துல் கலாமின் எதிரிகள் என்று அமித்ஷா குறிப்பிட்டு கூறியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.