இந்தியா சத்திரம் அல்ல: உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அமித் ஷாவின் 2047 திட்ட வரைபடம்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெற்ற உளவுத்துறையின் தேசியப் பாதுகாப்பு உத்தி மாநாட்டின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே இங்கு வாழ முழு உரிமையும் உள்ளது" என மிகக் காரசாரமாக தெரிவித்தார். சட்டவிரோத ஊடுருவல்கள் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மக்கள் தொகை சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் எச்சரித்தார்.
வளர்ந்த இந்தியா
2047க்குள் வளர்ந்த இந்தியா: பாதுகாப்பிற்கான புதிய வரைபடம்
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கு, நாட்டின் வலுவான உள்நாட்டுப் பாதுகாப்பையே முதன்மையாகச் சார்ந்துள்ளது என்று அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தக் கடந்த 8 மாதங்களில் அனைத்து எல்லை மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
இதன் மூலம் சட்டவிரோத ஊடுருவல்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் 4 அடுக்குகள் கொண்ட எல்லைப் பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விரைவான நீதி
புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் விரைவான நீதி முறைமை
நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அடுத்த ஒரு ஆண்டிற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா உறுதி அளித்தார்.
இந்த சீர்திருத்தங்கள் மூலம் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும், 3 ஆண்டுகளுக்குள் தீர்வு காண வழிவகை செய்யப்படும்.
மேலும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரும் விகிதம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
போதை ஒழிப்பு
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நவீனத் தொழில்நுட்பப் பயன்பாடு
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 'Detect, Disrupt and Destroy' என்ற உத்தியைப் காவல்துறை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் CCTNS, ICJS, NATGRID மற்றும் NAFIS ஆகிய தரவுத்தளங்கள் இணைக்கப்பட்டு சக்திவாய்ந்த உளவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இளம் அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வை பயன்படுத்தி எதிர்கால அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.