
நிதிஷ் குமார் தலைமையில்தான், ஆனால்... பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை (அக்டோபர் 16) உறுதிப்படுத்தினார். இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டு முடிவின் அடிப்படையிலேயே அடுத்த முதலமைச்சர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஒரு நேர்காணலில் பேசிய அமித்ஷா, நிதிஷ் குமாரின் அரசியல் பாரம்பரியத்தைப் பாராட்டினார். இந்திய சோசலிச அரசியலில் அவர் ஒரு முக்கியப் பிரபலம் என்று குறிப்பிட்ட அமித்ஷா, அவசரநிலையின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக உறுதியாக நின்ற ஜே.பி. இயக்கத்தில் நிதிஷ் குமாரின் முக்கியப் பங்கையும் நினைவுகூர்ந்தார்.
தலைமை
தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை
அமித்ஷா மேலும், "நாங்கள் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். அவரே எங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தலைமை தாங்குகிறார்." என்று உறுதிபடக் கூறினார். பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக வருவாரா என்ற கேள்விக்கு அவர் தேர்தலுக்கு பிறகு எம்எல்ஏக்களின் கூட்டு முடிவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், 2020 தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடித்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி நிதிஷ் குமாரே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பதையும் அமித்ஷா சுட்டிக்காட்டினார். பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.