ஜனவரி 8-ல் தொடங்குகிறது 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி
செய்தி முன்னோட்டம்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான 'சென்னை புத்தகக் கண்காட்சி' அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வரும் ஜனவரி 8, 2026 புத்தக கண்காட்சி தொடங்குகிறது. வழக்கம்போல சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறும். ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை என 14 நாட்கள் நடைபெறவுள்ளது.
சிறப்பம்சங்கள்
புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள்
இந்த ஆண்டு சுமார் 800-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் முன்னணிப் பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. தொடக்க விழாவின் போது, கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 'கலைஞர் பொற்கிழி விருதுகள்' மற்றும் பபாசி வழங்கும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார். கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிப்பறை மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பபாசி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வழக்கமான புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து, சர்வதேச புத்தகக் கண்காட்சியும் (Chennai International Book Fair) ஜனவரி மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பதிப்பாளர்களுடனான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.