சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு மாநிலம் தஞ்சை கீழவாசல் பகுதியிலுள்ள படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் உள்ளவர் குப்புசாமி(68), மீன் வியாபாரி. அதே பகுதியில் பூமால்ராவுத்தன் கோயில் தெருவில் உள்ளவர் விவேக்(36), கார் ட்ரைவராக உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நேற்று(மே.,22) மதியவேளையில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மதி வாங்கி அருந்தியுள்ளார்கள். மது குடித்த சிறிது நேரத்திலேயே அவர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளார்கள். இதனையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அருகில் இருந்தோர் அழைத்து சென்றுள்ளார்கள். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குப்புசாமி இறந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த விவேக்'கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் அதிரடி உத்தரவு
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த மதுவில் சையனைடு கலந்துள்ளது. அதனால் தான் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறியுள்ளன. இது குறித்து தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது தற்கொலையா அல்லது கொலையா? என்னும் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், அக்கடையில் வேலைப்பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரினை டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.