புஷ்பா 2 நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் சுமார் 100 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 4, 2024 அன்று, ஹைதராபாத்தின் ஆர்டிசி எக்ஸ் ரோட்டில் உள்ள சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்க்கப் பெருமளவிலான ரசிகர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவரது சிறுவன் ஸ்ரீதேஜ் பலத்த காயமடைந்து, ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரைத்துறையிலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றப்பத்திரிகை
குற்றப்பத்திரிகையில் உள்ள முக்கிய பெயர்கள்
இந்த வழக்கில் ஹைதராபாத் சிட்டி சிக்குட்பள்ளி போலீசார் நடத்திய விசாரணை முடிவடைந்து, டிசம்பர் 24 அன்று உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன் 11வது (A11) குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுனின் மூன்று மேலாளர்கள் மற்றும் அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த பவுன்சர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சந்தியா தியேட்டர் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் முதல் 5 குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி நபர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.