தீபாவளிக்கு மோதும் பிரபாஸின் ஸ்பிரிட் & ராமாயணா 2: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அனிமல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் திரிப்தி திம்ரி நடிப்பில் மிகத் தீவிரமாக உருவாகி வரும் ஸ்பிரிட் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2027 மார்ச் 5-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2027 அக்டோபர் 29-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் - யாஷ் கூட்டணியில் உருவாகும் ராமாயணா: பாகம் 2 திரைப்படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் ஸ்பிரிட் நேரடியாக மோதவுள்ளது.
ஆக்ஷன்
காவல்துறை பின்னணியில் அதிரடி ஆக்ஷன்
டி-சீரிஸ் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, கிரிஷன் குமார் மற்றும் பிரபாகர் ரெட்டி வங்கா ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், தனது கடமைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே போராடும் ஒரு தீவிரமான காவல் அதிகாரியாகப் பிரபாஸ் நடிக்கிறார்.
இப்படத்தில் திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்க, விவேக் ஓபராய், ஐஸ்வர்யா தேசாய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
முன்னதாக இக்கதாபாத்திரத்திற்கு தீபிகா படுகோன் ஒப்பந்தமாவதாக இருந்த நிலையில், பின்னர் திரிப்தி திம்ரி இறுதி செய்யப்பட்டார்.
எதிர்பார்ப்பு
வரலாற்று சிறப்புமிக்க பாக்ஸ்ஆஃபீஸ் மோதல்
முன்னதாக பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடிப்பது குறித்துப் பேசியிருந்த சந்தீப் ரெட்டி வங்கா, பாகுபலி 2 சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் ரூ.2,000 கோடியைத் தொட வேண்டும்.
அது மிகப்பெரிய சவால் என்றாலும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மிக அழுத்தமான மற்றும் விறுவிறுப்பான கதையைத் திரையில் கொடுப்பதே எனது நோக்கம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது முந்தைய திரைப்படமான அனிமல் உலகளவில் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ஸ்பிரிட் தீபாவளி ரேஸில் ராமாயணா 2 உடன் மோதுவது இந்தியத் திரைப்பட வரலாற்றின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.