சர்வதேச அஸ்தானா AI திரைப்பட விழா: இந்திய குறும்படம் 'சித்தாரா' 2-வது இடம் பிடித்து சாதனை
செய்தி முன்னோட்டம்
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முதலாவது அஸ்தானா ஏஐ திரைப்பட விழா கோலாகலமாக நிறைவடைந்தது. சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறும்படங்களுக்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் முன்னதாகத் தொடங்கி வைத்தார். உலகளவில் 125 நாடுகளிலிருந்து மொத்தம் 8,067 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற 25 குறும்படங்களை யுனெஸ்கோ முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஆட்ரே அசோலே உள்ளிட்ட சர்வதேச நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.
சித்தாரா
ரூ.1.6 கோடி பரிசு வென்ற இந்திய குறும்படம்
கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த விழாவில், இந்தியாவின் AI குறும்படமான சித்தாரா இரண்டாம் இடத்தைப் பிடித்து சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை தேடித்தந்துள்ளது.
இரண்டாம் இடம் பிடித்த இந்தியக் குழுவிற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1.6 கோடி - 89.5 மில்லியன் டெங்கே) ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் லுக்கிங் ஃபார் பெர்சிடா திரைப்படம் மூன்றாம் இடத்தையும் (1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு), கஜகஸ்தான் இயக்குநர் மிர்சாகான் ஜுமகானின் நகைச்சுவை குறும்படம் சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதையும் தட்டிச் சென்றன.
ரூ.3.7 கோடி பரிசு
லாத்வியா படைப்பிற்கு முதலிடம்
இவ்விழாவின் உச்சபட்ச விருதான கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் 4.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.7 கோடி - 201.5 மில்லியன் டெங்கே) முதல் பரிசை லாத்வியா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் நிகோலாய் ஷெஸ்டாக் இயக்கிய தி ஃபர்ஸ்ட் ஹானஸ்ட் டே என்ற படைப்பு வென்றது.
மொத்தம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசு மற்றும் மேம்பாட்டு நிதியுடன் நடைபெற்ற இவ்விழா, ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்கால சினிமா படைப்பாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த அங்கீகார மேடையாக அமைந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.