சாக்லேட் பாய் டூ பத்மஸ்ரீ!- 'அலைபாயுதே' முதல் 'ராக்கெட்ரி' வரை நீளும் நடிகர் மாதவனின் சாதனை பயணம்!
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் கலைத்துறையில் முத்திரை பதித்ததற்காக நடிகர் ஆர். மாதவனுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை அவருக்கு வழங்கவுள்ளார்.
பன்முகத் திறமை
பன்முக திறமை கொண்ட கலைஞர்
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள மாதவன், மணிரத்னத்தின் 'அலைபாயுதே' (2000) படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 'ரன்', 'அன்பே சிவம்', 'ஆய்த எழுத்து' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். ஹிந்தியில் 'ரெஹ்னா ஹை தேரே தில் மெய்ன்' மூலம் அறிமுகமான இவர், '3 இடியட்ஸ்' (3 Idiots), 'ரங் தே பசந்தி' போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இயக்குனர்
இயக்குநராகவும் அவதாரம் எடுத்து விருது வென்றார்
நடிப்போடு நில்லாமல், விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' (Rocketry) என்ற திரைப்படத்தை இயக்கி, தேசிய விருதையும் வென்றார். சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுக்களை பெற்றார்.
பட்டியல்
விருதுகளின் பட்டியல்
மாதவன் தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் 4 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். தமிழக அரசின் 3 திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். SIIMA விருதுகள் இரண்டு என பல விருதுகளை பெற்றுள்ளார் மாதவன். தற்போது நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ பெறவுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குச் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.