AMMA அமைப்பிலிருந்து விலகினார் திரிஷ்யம் 3 நடிகை அன்சிபா ஹாசன்!
செய்தி முன்னோட்டம்
மலையாளத் திரையுலகின் முன்னணிப் படமான 'திரிஷ்யம் 3' திரைப்படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்துப் புகழ்பெற்ற பிரபல நடிகை அன்சிபா ஹாசன், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' (AMMA) அமைப்பின் இணைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட அவதூறுகள் மற்றும் மதரீதியான விமரிசனங்கள் காரணமாகவே தான் இந்த தார்மீக முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் டினி டாம் மீது குற்றச்சாட்டு
மன உளைச்சலுக்கு ஆளானேன்
சமீபத்தில் வெளியான 'திரிஷ்யம் 3' இமாலய வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த நடிகை அன்சிபா ஹாசன், 'அம்மா' அமைப்பிற்குள் தனக்கு நேர்ந்த மன உளைச்சல்களை ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், "அம்மா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நடிகர் டினி டாம், திரையுலகினர் மத்தியில் என்னைப்பற்றித் தவறான வதந்திகளையும், எனது தனிப்பட்ட வாழ்க்கைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான கதைகளையும் திட்டமிட்டுப் பரப்பி வந்துள்ளார். அதுமட்டுமன்றி, என்னைக் குறிவைத்து மதரீதியான விமர்சனங்களை முன்வைத்ததுடன், 'ஜிஹாதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அவதூறு செய்துள்ளார். எனது தார்மீக அடையாளத்தைக் கெடுப்பதற்காகவே இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகள் திரைக்குப் பின்னால் நடந்துள்ளன" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நிர்வாகத்தின் மீதான அதிருப்தி
போலீஸ் புகார் சர்ச்சை
தான் கடந்த பிப்ரவரி 21 அன்றே தனது ராஜினாமா கடிதத்தை அமைப்பின் பொதுச் செயலாளரிடம் தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு வழங்கியிருந்ததாகக் கூறிய அன்சிபா, தற்போதைய சூழலில் அதன் உண்மையான பின்னணியைப் பொதுவெளியில் உடைத்துள்ளார். "அமைப்பின் மற்றொரு பெண் நிர்வாகி, எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கில் காவல்துறை மூலம் என் மீது போலிப் புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து நான் காவல் நிலையம் சென்று விளக்கமளிக்க வேண்டியிருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், 'அம்மா' அமைப்பின் தலைவரோ அல்லது மற்ற பொறுப்பாளர்களோ எனக்கு ஆதரவாக நிற்கவில்லை". "நிர்வாகக் கூட்டத்தில் எனது தரப்பு நியாயங்கள் அடியோடு மறுக்கப்பட்டதால், சுயமரியாதையற்ற அந்த இடத்தில் நீடிக்க விரும்பாமல் விலகினேன்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுத்த டினி டாம்
மலையாளத் திரையுகில் சலசலப்பு
நடிகை அன்சிபாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் டினி டாம், "அன்சிபா கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அடிப்படையற்றவை. யாரோ சொன்ன தவறான தகவல்களை நம்பி அவர் என் மீது பழி சுமத்துகிறார்.எனக்கு எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். யாரிடமும் நான் மதரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ தவறாக நடந்துகொண்டதில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார். 'ஹேமா கமிட்டி' அறிக்கைக்குப் பிறகு ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் 'அம்மா' நடிகர் சங்கம், தற்போது அதன் முதல் பெண் தலைவரான ஸ்வேதா மேனன் தலைமையில் இயங்கி வரும் நிலையிலும், மூத்த பெண் நிர்வாகி ஒருவர் அவதூறு காரணங்களால் வெளியேறியிருப்பது மலையாளத் திரையுலகிற்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.