Loading...
சிவா என்னை அவமதிக்கவில்லை, உதவிதான் செய்தார்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிளாக் பாண்டி
சிவகார்த்திகேயன் குறித்து தவறாக பேச வேண்டாம் என பிளாக் பாண்டி தெரிவித்துள்ளார்.

சிவா என்னை அவமதிக்கவில்லை, உதவிதான் செய்தார்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிளாக் பாண்டி

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
05:44 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி இடையே கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு விவகாரம் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு பிளாக் பாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பேசித் தீர்க்கப்பட்ட இந்த விவகாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு சிலர் திரித்துப் பேசி வருவதாகவும், சிவகார்த்திகேயனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பண உதவி 

பிளாக் பாண்டியின் தெளிவுரை

கடந்த காலங்களில் தான் ஒரு நேர்காணலில் பேசியதன் பின்னணியை விவரித்த பிளாக் பாண்டி, தான் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததை அறிந்து சிவகார்த்திகேயன் தனது மேலாளர் மூலம் தன் வீட்டிற்குப் பண உதவி அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டார்.

"சிவகார்த்திகேயன் செய்தது நட்பின் அடிப்படையிலான நல்ல உதவிதான். ஆனால் எனக்குப் பணத்தை விட நடிப்பதற்கான வாய்ப்பே தேவையாக இருந்தது.

அவரிடம் வாய்ப்புக் கேட்டால் நல்ல கதாபாத்திரம் கிடைக்கும் என நானும் என் அம்மாவும் நம்பினோம்.

அந்தப் பணத்தில் இருந்து 20 ரூபாயை மட்டும் சாமி படத்தின் முன் வைத்து, நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன்" என்று அவர் நினைவுகூர்ந்தார்.

சமரசம்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

தனது முந்தைய பேச்சுகள் சிவகார்த்திகேயனைத் தவறாகச் சென்றடைந்துவிட்டதை உணர்ந்து, பின்னர் அவரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கியதாகவும் பிளாக் பாண்டி தெரிவித்தார்.

அப்போது, "எனக்குக் கை, கால்கள் நன்றாக உள்ளன; என்னால் உழைக்க முடியும் என்பதால் பணம் வேண்டாம், வாய்ப்பு மட்டுமே வேண்டும்" எனக் கூறியபோது, சிவகார்த்திகேயன் அமைதியாகப் புரிந்து கொண்டு பொருத்தமான வாய்ப்பு வரும்போது தெரிவிப்பதாக உறுதியளித்ததாகக் கூறினார்.

"இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே பேசி சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது.

சிவகார்த்திகேயன் என்னை அவமதித்துவிட்டதாகக் கூறி பழைய விஷயத்தை மீண்டும் பூதாகரமாக்குவது வருத்தமளிக்கிறது.

எனவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT