"இனி என் குரல் ஒலிக்காது!" - திரையுலகை அதிரவைத்த அரிஜித் சிங்கின் ஓய்வு முடிவு; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
தனது காந்த குரலால் இந்திய திரையுலகையே கட்டிப்போட்டிருந்த முன்னணி பாடகர் அரிஜித் சிங், இனி திரைப்படங்களுக்கு பின்னணி பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,"இத்தனை ஆண்டுகள் எனக்கு அன்பளித்த ரசிகர்களுக்கு நன்றி. இனி புதிய திரைப்படப் பாடல்கள் எதையும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இந்த நீண்ட பயணம் இனிதே நிறைவடைகிறது," எனத்தெரிவித்துள்ளார். இந்த திடீர் முடிவுக்கு பல காரணங்கள் இருப்பதாக அரிஜித் சிங் விளக்கியுள்ளார். "திரைப்பட பாடல்களை தொடர்ந்து பாடுவதில் எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இசைத்துறையில் இன்னும் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், Independent Music உருவாக்கத்தில் கவனம் செலுத்தவும் விரும்புகிறேன். மேலும், புதிய திறமையாளர்கள் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து மதிப்பு
அரிஜித் சிங்கின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் ஒருவரான அரிஜித் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 414 கோடி ரூபாய் ($50 மில்லியன்) ஆகும். ஒரு பாடலுக்கு: சுமார் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார். நேரலை நிகழ்ச்சிகள்: ஒரு இரண்டு மணி நேர நேரலை நிகழ்ச்சிக்கு சுமார் 14 கோடி ரூபாய் வரை கட்டணமாக பெறுகிறார். சொத்துக்கள்: மும்பையின் வெர்சோவா பகுதியில் 36 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல சொகுசு கார்களை வைத்துள்ளார். 'தும் ஹி ஹோ'(Tum Hi Ho) பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், சமீபத்தில் வெளியான 'கெஹரா ஹுவா'(Gehra hua) உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.