ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: பலவருட வரலாற்றை மாற்றியமைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் இயங்காது என்றாலும், பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற 2017 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தைத் தொடர அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த இறுதிக்க முடிவு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஜனவரி முதல் வாரத்தில் எடுக்கப்படும்.
வரலாற்றுப் பின்னணி
ஞாயிறு பட்ஜெட் ஒன்றும் புதிதல்ல
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அரிது என்றாலும், இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். மேலும், 2012 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் சில முக்கிய விவாதங்களுக்காக நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடியுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, புதிய நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்பாகவே அனைத்துத் திட்டங்களும் அமலுக்கு வர ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
விடுமுறை
பங்குச்சந்தை மற்றும் விடுமுறை குறித்தத் தகவல்கள்
பிப்ரவரி 1, 2026 அன்று 'குரு ரவிதாஸ் ஜெயந்தி' வருகிறது. இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை (Restricted Holiday) என்பதால் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு ஏற்பச் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் பிரதிபலிக்க, தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவை அன்று சிறப்பு வர்த்தக நேரத்தை அறிவிக்க வாய்ப்புள்ளது.