விற்பனையானது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்! ரூ.4,300 கோடிக்கு வாங்கியது ஆரிப் ஹபீப் குழுமம்
செய்தி முன்னோட்டம்
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (PIA), நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் ரூ.4,300 கோடி (135 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்) என்ற மிகப்பெரிய தொகைக்கு 'ஆரிப் ஹபீப்' குழுமம் இந்த ஏலத்தில் வெற்றி பெற்றது. லக்கி சிமெண்ட் (Lucky Cement), ஏர்ப்ளூ (Airblue) மற்றும் ஆரிப் ஹபீப் குழுமம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இறுதிப் போட்டியில் இருந்தன. இறுதியில் ரூ.4,320 கோடி வரை ஆரிப் ஹபீப் குழுமம் விலையை உயர்த்தியதால், லக்கி சிமெண்ட் பின்வாங்கியது.
அம்சங்கள்
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
முதற்கட்டமாக 75% பங்குகள் விற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25% பங்குகளை அடுத்த 90 நாட்களில் வாங்குவதற்கு ஆரிப் ஹபீப் குழுமத்திற்கு அனுமதி உண்டு. இந்த கொள்முதல் தொகையைத் தவிர, அடுத்த 5 ஆண்டுகளில் விமான சேவையை மேம்படுத்தவும், புதிய விமானங்களை வாங்கவும் ரூ.2,560 கோடி கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஏலத் தொகையில் 92.5% நேரடியாக விமான நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக பயன்படுத்தப்படும். 7.5% தொகை பாகிஸ்தான் அரசுக்கு செல்லும்.
காரணம்
ஏன் இந்த விற்பனை?
கடந்த பல ஆண்டுகளாக PIA நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. நிர்வாக கோளாறு மற்றும் கடனை தீர்க்க முடியாத சூழலால், அந்நாட்டு அரசு இந்த விமான நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது. முன்னதாக, விமான நிறுவனத்தின் சுமார் ரூ.20,928 கோடி மதிப்பிலான கடனை பாகிஸ்தான் அரசே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டும் புத்துயிர் பெறும் என அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.