போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்
இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைவான மருந்துகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பிட்ட மருந்து போலியானது அல்லது தரம் குறைவானது என்பதைக் கண்டறியவும் புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தபடுகிறது. இன்று முதல் உற்பத்தி செய்யப்படும், இந்தியாவில் சில்லறை மருத்துவச் சந்தையில் அதிகம் விற்பனையாகும், டாப் 300 மருந்துகளின் லேபிள்களில், QR கோடு ஒன்று இடம்பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த QR கோடை ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஸ்கேன் செய்ய முடியும். அப்படி ஸ்கேன் செய்யும் போது, குறிப்பிட்ட மருந்தின் பேட்ச் எண், உற்பத்தி உரிமம் ஆகிய தகவல்களை நாம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி மருந்துகளின் விற்பனையைக் குறைக்க நடவடிக்கை:
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் பல்வேறு இடங்களிலுள்ள மருந்தகங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது போலியான மற்றும் தரம் குறைவான மருந்துகளின் விற்பனை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்தே, போலியான மற்றும் தரம் குறைவான மருந்துகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைந்த இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளிலும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்கக் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முடியாத பட்சத்தில், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளானது, தர நிர்ணய சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அதன் மீது QR கோடை அச்சிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையானது தவறாமல் அனைத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.