ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூல்; மத்திய அரசு தகவல்
இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் 10% அதிகரித்து சுமார் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2023இல் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.59 லட்சம் கோடியாக இருந்தது. முன்னதாக, ஜூலை 2024இல் இது ரூ.1.82 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 2024இல், உள்நாட்டு வருவாய் 9.2 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது. பொருட்களின் இறக்குமதி மூலம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1% அதிகரித்து ரூ.49,976 கோடியாக உள்ளது. இந்த மாதத்தில் ரூ.24,460 கோடி மதிப்பிலான ரீஃபண்டுகள் வழங்கப்பட்டன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாகும்.
ரீஃபண்ட்களுக்கு பிறகான நிகர வருவாய்
ரீஃபண்ட்களை சரிசெய்த பிறகு, ஆகஸ்ட் மாத நிகர ஜிஎஸ்டி வருவாய் 6.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாதம் வரி விகிதங்களை ஆய்வு செய்வது குறித்து விவாதிக்கும் எனக் கூறியிருந்தார். ஆனால் வரி மற்றும் அடுக்குகளை மாற்றுவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறினார். இதற்கிடையே, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் கீழ் விகிதத்தை ஆய்வு செய்வது குறித்த அமைச்சர்கள் குழு கடந்த வாரம் கூடி, ஜிஎஸ்டியின் கீழ் 5, 12, 18 மற்றும் 28 சதவீதத்தில் மாற்றமின்றி அடுக்குகளைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.