வங்கி ஊழியர்கள் போராட்டம்: செப்டம்பர் மாதம் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் வங்கி சேவைகள் வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. வாரத்தில் 5 நாள் வேலை மற்றும் புதிய ஊக்கத்தொகைத் திட்டம் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) செப்டம்பரில் 4 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. UFBU வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, செப்டம்பர் 11-ஆம் தேதி முதற்கட்டமாக ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களில் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். அக்டோபர் 26-க்குள் தீர்வு காணப்படாவிட்டால் வரம்பற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கி சேவை
5 நாள் வங்கி சேவை கோரிக்கை
கடந்த 2024 மார்ச் மாதம் இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வார வேலை நாட்களை 5 நாட்களாகக் குறைத்து, வேலை நேரத்தை தினசரி 40 நிமிடங்கள் அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், மத்திய அரசு இந்த மாற்றத்தை அமல்படுத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்துள்ளதாகச் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
அரசின் புதிய செயல் திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தில் கடும் பாகுபாடு காட்டப்படுவதாக ஊழியர்கள் எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளனர்.
5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள உயர் அதிகாரிகளுக்கு (Scale IV மற்றும் அதற்கு மேல்) 365 நாட்கள் வரை அடிப்படைச் சம்பளம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் நிலையில், 95 சதவீத ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
பிற முக்கிய கோரிக்கைகள்
ஓய்வூதியத்தை உயர்த்தியமைத்தல், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே சீரான அகவிலைப்படி வழங்குதல் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள ஊழியர்களைப் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற்றுதல் உள்ளிட்ட நிலுவைக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.