
ஜிஎஸ்டி 2.0: வரி குறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை சரிவு
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு இன்று முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைத்து வரும் நிலையில், ஆவின் நிறுவனமும் இந்த விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.690 இல் இருந்து ரூ.650 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், 500 மி.லி நெய்யின் விலை ரூ.330 இல் இருந்து ரூ.310 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்பு
விலைக் குறைப்பு விபரங்கள்
மேலும், 50 மி.லி நெய் ரூ.45 ஆகவும், 5 லிட்டர் நெய் ரூ.3,300 ஆகவும், 15 கிலோ நெய் ரூ.10,900 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆவின் பன்னீர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 க்கு விற்கப்பட்ட 200 கிராம் பனீர் இனி ரூ.110 க்கு கிடைக்கும். மேலும், 500 கிராம் பனீரின் விலை ரூ.300 இல் இருந்து ரூ.275 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்புகள் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஜிஎஸ்டி வரிக் குறைப்பு அமலானதைத் தொடர்ந்து பல்வேரு பொருட்களின் விலையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.