LOADING...
இ-ரிக்‌ஷாக்கள் போல எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை ஹேக் செய்ய முடியுமா? சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை
இ-ரிக்‌ஷாக்கள் போல எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை ஹேக் செய்ய முடியுமா என்பது குறித்த நிபுணர்களின் விளக்கம்

இ-ரிக்‌ஷாக்கள் போல எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை ஹேக் செய்ய முடியுமா? சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்து பழகிய ஓடும் கார்களை ஹேக்கிங் செய்து முடக்கும் காட்சி, தற்பொழுது இந்தியாவில் நிஜமாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஓடிக்கொண்டிருந்த இ-ரிக்‌ஷாக்களை மர்ம நபர்கள் சிலர் ப்ளூடூத் மூலம் ஹேக் செய்து முடக்கிய வீடியோக்கள் வைரலானது. BAT-BMS என்ற ஸ்மார்ட்போன் செயலி மூலம் பேட்டரியை முடக்கி வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தியதால் ஓட்டுநர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த குறிப்பிட்ட செயலிகள் உட்பட இதே மாதிரி இயங்கும் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது.

முடக்கத்திற்கான காரணம்

ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷா பேட்டரிகள் முடக்கப்பட்டது எப்படி?

இந்த முடக்கத்திற்கு முக்கியக் காரணம், இ-ரிக்‌ஷாக்களில் உள்ள குறைந்த விலை லித்தியம்-அயன் பேட்டரிகளில் போதிய பாதுகாப்பு இல்லாததே ஆகும். இந்தப் பேட்டரிகளில் உள்ள ப்ளூடூத் வசதி கொண்ட பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS), உரிய பாஸ்வேர்டு அல்லது அங்கீகார சரிபார்ப்பு (Authentication) இல்லாமல் இயங்கியுள்ளது. இதனால், ப்ளூடூத் எல்லைக்குள் இருந்த நபரால் தங்களது மொபைல் செயலி மூலம் எளிதாக இ-ரிக்‌ஷாவின் பேட்டரியுடன் இணைந்து, அதன் டிஸ்சார்ஜ் செய்யும் திறனைத் துண்டித்து வண்டியை நடுரோட்டில் நிறுத்த முடிந்துள்ளது. இது ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் பைக் மற்றும் கார்கள்

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை ஹேக் செய்ய முடியுமா?

இ-ரிக்‌ஷா சம்பவத்தைத் தொடர்ந்து, நவீன எலக்ட்ரிக் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் இதேபோல ஹேக் செய்ய முடியுமா என்ற கேள்வி வாகன உரிமையாளர்களிடையே எழுந்துள்ளது. சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, நவீன எலக்ட்ரிக் வாகனங்கள் அடிப்படையில் சக்கரங்களில் ஓடும் கணினிகளாகவே உள்ளன. அவை மென்பொருள், சென்சார்கள், வயர்லெஸ் இணைப்புகள் மற்றும் கிளவுட் சேவைகளை நம்பியே இயங்குவதால், சைபர் தாக்குதல்களுக்கு இலக்காக அதிக வாய்ப்புள்ளது. எனினும், எலக்ட்ரிக் கார்களை ப்ளூடூத் மூலம் எளிதாக முடக்கிவிட முடியாது என்றாலும், எந்தவொரு இணைக்கப்பட்ட சிஸ்டமும் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூற முடியாது.

Advertisement

சினிமா

திரைப்படங்களில் வருவது போல கார்களைக் கட்டுப்படுத்த முடியுமா?

எலக்ட்ரிக் வாகனங்களின் பவரைத் துண்டித்து வாகனத்தை நிறுத்துவது சாத்தியம் என்றாலும், திரைப்படங்களில் காட்டப்படுவது போல ஓடும் காரின் ஸ்டீயரிங் மற்றும் பிரேக்குகளை முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது ஹேக்கர்களுக்குக் கடினமான காரியமாகும். இதற்கு ஒரு வாகனத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்புத் தடைகளை அவர்கள் உடைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், கடந்த 2022 ஆம் ஆண்டில், ஜெர்மனியை சேர்ந்த ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், மூன்றாம் தரப்பு மென்பொருள் பிழையைப் பயன்படுத்தி 13 நாடுகளில் உள்ள 25 டெஸ்லா கார்களின் சில செயல்பாடுகளை ரிமோட் மூலம் இயக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

செய்ய வேண்டியவை

உற்பத்தியாளர்களும் வாகன உரிமையாளர்களும் செய்ய வேண்டியது என்ன?

வாகனம் உற்பத்தியாகும் முதல் நாளிலிருந்தே அதன் வன்பொருள் மற்றும் மென்பொருளில் பாதுகாப்பை ஒருங்கிணைப்பது அவசியமாகும். கார்களை விற்பனை செய்த பின்பு ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதை போல இணையப் பாதுகாப்பை அனுக முடியாது. வாகன உரிமையாளர்கள் தரப்பில், தங்களது வாகனத்தின் மென்பொருளையும் அதற்கான மொபைல் செயலியையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ப்ளூடூத் இணைப்புகளுக்கு வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement