புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம்
1860களில் இருந்து பயன்பாட்டில் உள்ள பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன், விரைவில் இரண்டு கட்டங்களாக புதுப்பிக்கப்பட உள்ளது. தென்மேற்கு ரயில்வே (SWR) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, ரூ.525 கோடி செலவில், புறநகர் ரயில் செயல்பாடுகளுக்கான கூடுதல் நடைமேடைகள் மற்றும் கட்டிட மறுவடிவமைப்பு உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள், 2023 பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் எனவும், இதர பணிகள் மூன்றாண்டுகளில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இரண்டு புதிய தீவு நடைமேடைகள், நான்கு கூடுதல் பிளாட்பார்ம்கள் மற்றும் மூன்று புதிய ரயில் தடங்கள் ஆகியவையும் அமையவிருக்கின்றன. மறுவடிவமைக்கப்பட்ட யார்டு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் ஒயிட்ஃபீல்டில் அமையப்போகிறது. போர்பேங்க் சாலையையும் நேதாஜி சாலையையும் இணைக்கும் வகையில் நடைபாதை மேம்பாலம் கட்டப்படும்.
தரமுயர்த்தப்படும் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம்
பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம்
இரண்டாவது கட்டத்தில், இந்த வரலாற்று கட்டிடத்தின் தற்போதைய பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்து, பராமரிப்பு பணிகள் செய்யப்படும். தடையில்லா பல்வகை போக்குவரத்து இணைப்பை வழங்கும் பொருட்டு, ரூ.480 கோடி செலவில் விமான நிலைய அமைப்பை ஒத்த முனையம் அமைக்கப்படும். இந்த நிலையம், போக்குவரத்து தவிர, 24x7 வணிக நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பிரெய்லி வரைபடங்கள், சாய்வுதளங்கள், லிப்ட்கள் மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை வழங்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிலிக்கான்-சிட்டி மற்றும் ஸ்டார்ட்-அப் தலைநகராக பெங்களூரின் உணர்வை கட்டிடத்தின் முகப்பு பிரதிபலிக்கும் என்று SWR கூறியது.