புதிய அறிமுகங்களைத் திட்டமிடும் நிறுவனங்கள், வளரும் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தை
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீடும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், இன்னும் கணிசமான எலெக்ட்ரிக் வாகன விற்பனை அளவைக் கூட இந்தியா எட்ட வில்லை. கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவில் நான்கு வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஆனால், தற்போது 13 கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், கியா, பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் பென்ஸ், சிட்ரன், வால்வோ, ஆடி மற்றும் போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் 21 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இத்தனைக்குப் பிறகு, இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை, மொத்த விற்பனையில் 2.47 சதவிகிதம் மட்டுமே.
ஆதிக்கம் செலுத்தும் இந்திய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள்:
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் தற்போது முன்னணியில் இருப்பது இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான். 2030-ம் ஆண்டிற்குள் தங்களது விற்பனையில், 50% எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். முன்பு 1,300 எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த டாடா, கடந்த மூன்றான்டுகளில் 50,000 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் அளவிற்கு இந்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் தங்களது கால் தடத்தைப் பதித்திருக்கிறது. எம்ஜி மோட்டார் நிறுவனமும் இந்தியாவில் 25% எலெக்ட்ரிக் கார் விற்பனை இலக்கை ஒட்டி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிதாக தாங்கள் வெளியிட்ட குறைந்த விலை எலெக்ட்ரிக் காரான காமெட்டின் அறிமுகத்திற்குப் பிறகு, இந்திய சந்தையின் மீது சற்று கூடுதல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார்.