அமேசானில் ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக் ப்ரோ ஆர்டர் செய்த இங்கிலாந்து நபர்- நாய் உணவை பெற்றதால் அதிர்ச்சி
தற்போதைய அவசர உலகில் பலர் நேரில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை விட ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தப்படியே ஆர்டர் செய்து வாங்கி கொள்கிறார்கள். இதற்கான பல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் உலகம் முழுக்க செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் உள்ள ஆலன் என்பவர் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை தனது மகளுக்காக அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். 1,20,000 மதிப்புள்ள இந்த லேப்டாப்பை மறுநாளே டெலிவரி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவர் ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் கோரிக்கை படி, மறுநாளே டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது. அந்த பார்சலை திறந்துபார்த்த ஆலன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், பார்சலில் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக நாய்களின் உணவான பெடிகிரி இருந்துள்ளது.
15 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு பணத்தை திரும்ப கொடுக்க ஒப்புக்கொண்ட நிறுவனம்
இது குறித்து போலீசில் புகார் செய்த ஆலன், அமேசானின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு சரியாக பதில் அளிக்காத நிறுவன ஊழியர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பணத்தை திரும்ப தர ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலன் கூறுகையில், "நான் 20 வருடங்களாக அமேசான் நிறுவன வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளேன். இதுவரை இவ்வாறு எதுவும் நடந்தது இல்லை. ஆனால் இம்முறை இந்த நிகழ்வு எனக்கு பெரும் மன அழுத்தத்தை தந்ததோடு, அவர்கள் என்னை நடத்திய விதம் என்னை காயப்படுத்தியது. ஒரு வழியாக நிறுவன சார்பில் மன்னிப்பு கோரப்பட்டதையடுத்து, பணத்தை திரும்ப பெற உதவுவதாக அமேசான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.